லாரி-ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியில் கட்டிட தொழிலாளியாக கோபால் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் சங்ககிரி பகுதியிலிருந்து கட்டிட வேலைக்கு தொழிலாளர்களை அழைத்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இதனையடுத்து வேலை முடிந்தவுடன் மீண்டும் கோபால் மாலை வேளையில் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அதே பகுதியில் இறக்கி விடுவார். அதன்படி கோபால் கோம்பூரான்காடு பகுதியைச் சேர்ந்த அழகேசன், வீரனூர் பகுதியை சேர்ந்த அய்யந்துரை போன்றோரை வேலைக்கு அழைத்துச் சென்றார். இவர்களில் அழகேசன் ஆட்டோவின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அதன்பின் நங்கவள்ளி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான ராஜகுமாரன், சதீஷ் ஆகியோரையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சங்ககிரிக்கு கோபால் வண்டியை ஓட்டி சென்றார். அப்போது சங்ககிரியில் இருந்து ஓசூருக்கு டீசல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக சரக்கு ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஆட்டோவை ஓட்டிச்சென்ற கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அவருடன் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அழகேசன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அழகேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால், அழகேசன் ஆகிய 2 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த கட்டிட தொழிலாளர்கள் அய்யந்துரை, ராஜகுமாரன் சதீஷ் போன்றோர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டேங்கர் லாரி டிரைவரான தர்மபுரியை சேர்ந்த அருள்முருகன் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.