Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலையை விட்டு நீக்கியதால்… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வேலையை விட்டு நீக்கியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மகேந்திரவாடி கீழத்தெரு பகுதியில் ஏசையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயராஜ் மற்றும் அந்தோணிராஜ் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் ஜெயராஜ் என்பவர் அப்பகுதியில் தேசிய ஊரக திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராஜ் வேலைக்கு சென்ற போது மேலநீலிதநல்லூர் பகுதியின் பஞ்சாயத்து அதிகாரிகள் தேசிய ஊரக பணிதள அலுவலகத்திற்கு சென்று அவரை பணியில் இருந்து நீக்கி விட்டதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு ஜெயராஜ் அதிர்ச்சி அடைந்து மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஜெயராஜ் மேலநீலிதநல்லூர் அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளிடம் எதற்காக தன்னை பணியில் இருந்து நீக்கம் செய்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் நாங்கள் எடுத்த முடிவு இல்லை மேலதிகாரிகள் எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெயராஜ் அங்கேயே தான் கொண்டு சென்ற விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு ஜெயராஜுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் அண்ணனான அந்தோணிராஜ் மற்றும் அவரின் உறவினர்கள் இணைந்து ஜெயராஜின் உடலை வாங்க மறுத்து மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியனின் தலைமையில் திடீரென மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் ஜெயராஜின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஜெயராஜின் இறப்பிற்கு இழப்பீடு வழங்கவும், அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |