மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் கூலித் தொழிலாளியான குணசேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குணசேகர் வேலைக்காக தனது மோட்டார் சைக்கிளில் நிலவாரப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவரின் மோட்டார் சைக்கிளின் மீது மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டது. இதில் குணசேகர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் பலத்த காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு குணசேகருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று குணசேகரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகன டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.