வெளிநாட்டு பயணியர் கொண்டு வந்த உணவு பொருட்களினாலே கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சீன அரசு குற்றச்சாட்டு.
சீனாவில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளுக்கு பரவியது.அதிலும் குறிப்பாக சிச்சுவான், லியோனி, ஹிபே,ஹாய்லாங்ஜங்க் போன்ற பகுதிகளில் வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார கமிஷன் கடந்த சனிக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் சமீபத்தில் கொரோனவின் தாக்கம் அதிகரித்து வருவதற்கு காரணம் வெளிநாட்டு பயணிகள் குளிரூட்டப்பட்ட பதப்படுத்திய உணவுகளை தங்கள் நாட்டிற்கு எடுத்து வந்தது தான் என்று வெளியிட்டுள்ளது .
மேலும் சீன நாட்டின் சுகாதாரத்துறை இணையதளத்திலும் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து வைரஸ் எவ்வாறு மற்ற பகுதிகளுக்கு பரவியது என்று ஆராய உலக சுகாதார அமைப்பினர் தற்போது சீனாவிற்கு சென்றுள்ளனர். பல்வேறு நாடுகளிலிருந்து வந்த இந்த அமைப்பின் மருத்துவ விஞ்ஞானிகள் தற்போது 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த 14 நாட்கள் முடிவதற்குள் சீனா பல வதந்திகளை கிளப்ப முயன்று வருகிறது.
வூஹான் நகரிலிருந்து வைரஸ் திட்டமிட்டு பரப்பப்பட்டதா என்ற கோணத்தில் உலக சுகாதார அமைப்பினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் இதனை திசை திருப்ப வெளிநாட்டு பயணிகள் கொண்டு வந்த உணவுப் பொருட்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவியதாக சீன அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.