வெளிநாட்டில் இருந்து வேலை செய்ய வருபவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களை அமெரிக்கா நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக வல்லரசு நாடான அமெரிக்கா மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் கடும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் இதற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, வேலை இழப்பு போன்றவை தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் அதிபர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அந்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே பணி நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து H1B விசாக்கள் பெற்று வேலை செய்பவர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே H1B விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இந்த விசாவை வைத்து வேலை செய்து வருவதால் அதிபரின் இந்த முடிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.