குளத்தில் உள்ள தண்ணீரில் மூழ்கி டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம் பகுதியில் டிரைவரான சுடலை மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுடலை மணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுடலைமணி வெளியில் சென்று விட்டு வருவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுடலைமணி சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரின் தாய் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் சிலர் அங்கு அமைந்துள்ள குளத்திற்கு சென்றபோது சுடலைமணி அங்கு தண்ணீரில் மூழ்கி இறந்து அவரின் சடலம் மேலே மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குளத்தில் மிதந்த சுடலை மணியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.