தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு தூய்மைப் பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் வந்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் தூய்மைப் பணியாளர்கள் கூறியிருப்பதாவது “சென்னையில் முன்பு ஏற்பட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மற்றும் பிற மாவட்டத்திலிருந்து தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றனர். இவ்வாறு அழைத்துச் சென்றதும், நடத்திய விதமும் எங்களுக்கு கசப்பான அனுபவத்தை தந்தது.
அங்கு பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு, கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. மேலும் தூய்மை பணி மேற்கொள்ள முறையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. ஆகவே நடப்பாண்டில் சென்னை மாநகராட்சியில் வெள்ள பாதிப்பு பணிகளை சீர் செய்ய ஈரோடு மாவட்டத்தில் இருந்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு தனி பேருந்து வசதி, தரமான உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
அதன்பின் தூய்மை பணியாளர்கள் தங்கும் இடத்தில் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். இதனைத்தொடர்ந்து இந்த பணிகளுக்கு செல்வதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும். தொடர்ந்து தங்கி வேலை பார்க்கும் பட்சத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியின் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதால் கூடுதலாக ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும்” என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.