தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி நேற்று சென்றிருந்தார்.
அப்போது மடிபள்ளி என்ற இடத்தில் எம்எல்ஏ மண்சிரெட்டியை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். மேலும் தங்களுக்கு நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறியும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து எம்எல்ஏ மீது காலனி வீசியதோடு அவர்களின் வாகனத்தையும் சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.