நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்திற்கு மாற்றாக கிராம மக்களே ஒன்று சேர்ந்து மரங்களை கொண்டு பாலம் அமைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கன மழை பெய்தது. இதில் தேவலா பகுதியில் ஒரே நாளில் பெய்த கன மழையில், புளியம்பாறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து அடித்துச் செல்லப்பட்டது. தொடர் மழையால் அங்கு பாலம் அமைக்க முடியாத நிலையில் வருவாய் துறையினர் மற்றும் நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் 9 ராட்சத கற்பூர மரங்களை வைத்து கிராம மக்கள் உதவியுடன் ஒரே நாளில் பாலத்தை அமைத்தனர்.
அந்த மரப்பாலத்தில் லாரி மற்றும் கார்கள் செல்லும் அளவிற்கு உறுதியாக இருந்ததையும் சோதித்த பிறகே வாகன போக்குவரத்து தொடங்கியது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனிலும் அங்கு தமிழக அரசு நிரந்தர பாலத்தை விரைவில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.