கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு மற்றும் பாலாறு ஆகிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சுற்றி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் கோயிலுக்குள் இருந்த மகாலிங்கம் மற்றும் திருமலைச்சாமி ஆகிய காவலர்கள் வெள்ளத்தில் சிக்கினர். அதன்பிறகு தகவலறிந்து வந்த பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடிய பின்னர் கயிறு கட்டி இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர். அதனைத் தொடர்ந்து தொடர் மழை காரணமாக ஆழியாறு, பாலாறு மற்றும் காட்டாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.