சங்கராபுரம் அருகே வெள்ளத்தில் சிக்கி 600 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருத்தபிள்ளை, பழனி, அஞ்சலை. இவர்கள் மூவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரிகரை ஓடை அருகே பட்டி அமைத்து அதில் 600க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை அடைத்து வளர்த்து வந்தனர். தற்போது சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சங்கராபுரம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் ஏரியில் உள்ள தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் ஓடை பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது இந்த வெள்ளம் ஓடைக்கு அருகே இருந்த ஆட்டுப்பட்டியில் புகுந்ததால் அங்கு அடைக்கப்பட்டிருந்த அனைத்து ஆடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது .நள்ளிரவு என்பதால் ஆடுகள் கத்திய சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. எனவே 600 ஆடுகளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று வழக்கம் போல் ஆட்டுப்பண்ணைக்கு வந்த கருத்தபிள்ளை, பழனி ,அஞ்சலை ஆகியோர் பண்ணையில் இருந்த ஆடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 50 லட்சம் ஆகும். இதனால் ஆட்டு பண்ணை உரிமையாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே அதற்குரிய பணத்தை அரசு தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.