உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த வெள்ளிப் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் 373 பதவிகளுக்கு வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக இம்மாவட்டத்தில் 15 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கச்சிராபாளையம் செல்லும் வழியில் அம்மன் நகர் பேருந்து நிறுத்தம் அருகாமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தியதில் அரைஞான் கொடி, கொலுசு, மெட்டி என பல வெள்ளிப் பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பார்த்திபன் என்பதும், பின் வெள்ளிப் பொருட்களுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. மேலும் காரில் எடுத்து வந்த 19 கிலோ வெள்ளி பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அலுவலர் நடராஜனிடம் ஒப்படைத்துள்ளனர்.