தமிழகத்தில் ஏற்கனவே மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் தற்போது மின் கட்டணத்திலையும் குளறுபடி ஏற்பட்டுள்ளதுு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கீடு செய்யப்படும். இதற்கிடையில் 100 யூனிட் வரை வருபவர்கள் மின்கட்டணம் செலுத்த வேண்டாம் என அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள கூலி தொழிலாளி வீட்டில் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் மின்கட்டணம் வந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதாவது வேலூர் மாவட்டம் முத்து மண்டபம் பகுதியில் உள்ள டோபிக் கானா குடிசை மற்றும் வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர் ராணி, மகன் நரேஷ் மற்றும் அவருடைய மனைவி ராதிகா . ராணியின் கணவர் இறந்து விட்ட நிலையில் கட்டட கூலி வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையில் ராணி சராசரியாக மின் கட்டணம் 100 முதல் 300 வரை செலுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில் ராணியின் வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று மின்கட்டண அளவீடு செய்யப்பட்டது. அப்போது 24 ஆயிரம் யூனிட் மின்சாரம் செலவிடப்பட்டு உள்ளதாகவும் அதற்கான மின் கட்டணம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஊழியர் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணி மற்றும் நரேஷ் இருவரும் தோட்டப்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கூறியதன் பேரில் ராணி தனது புகாரை மனுவாக எழுதி கொடுத்துள்ளார். இந்த மனுவை ஆய்வு செய்வதற்கு வியாழக்கிழமை அன்று ராணியின் வீட்டிற்கு நேரில் சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின் கருவியை பரிசோதனை செய்து புதிய மீட்டர் பொருத்தினர். இருப்பினும் தற்போது வந்துள்ள மின் கட்டணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என ராணியிடம் கூறிவிட்டார்.
இது தொடர்பாக ராணி கூறுகையில், “ஒரு டிவி, பிரிட்ஜ், 4 டியூப் லைட், இரண்டு செல்போன் உள்ள எங்கள் வீட்டில் நாங்கள் வேலைக்கு செல்வதால் பகல் நேரங்களில் யாரு மின்சாரம் பயன்படுத்துவது இல்லை. இரவு நேரங்களில் மட்டுமே மின்சாரம் பயன்படுத்தி வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தால் பல மாதங்கள் நாங்கள் மின்சாரம் கட்டணம் கூட செலுத்தியதில்லை. மேலும் சில மாதங்கள் 100 முதல் 300 வரை செலுத்தி இருக்கிறோம். இருப்பினும் தற்போது கூலி வேலை பார்க்கும் எங்களிடம் ஒரு லட்சம் மின்சார கட்டணம் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்வாரிய ஊழியர்கள் ஏதேனும் மோசடியில் ஈடுபடுகிராரா என்பதை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மின்வாரியத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். “ராணி என்பவர் வீட்டில் பழைய மீட்டர் அளவு 1656 லிருந்து திடீரென 26 ஆயிரத்து 426 ஆக மாறியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்” என்று கூறியுள்ளனர்.