வேலூரில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய்-சேய் இருவரும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாவில் இருக்கும் பாபு ராஜேந்திர பிரசாத் தெருவில் ராஜா என்பவர் பேக்கரி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால், வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கருத்தரிப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சிகிச்சையை அடுத்து மகாலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் மகாலட்சுமிக்கு பிரசவவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டது என்று உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மகாலட்சுமியும் அடுத்த சில மணி நேரத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் எங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை என்றும் இறந்த குழந்தையை காண்பிக்கவில்லை என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில் மருத்துவர்கள் கவனக் குறைவாக இருந்ததால் மகாலட்சுமி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்து இருக்கின்றனர். எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மகாலட்சுமி மற்றும் அவரது குழந்தை சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.