கனமழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து விவசாய நிலங்களில் தேங்கியது. இதனால் திருப்பத்தூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. திருப்பத்தூரில் அண்ணா நகர், கலைஞர் நகர், டி.எம்.சி. காலனி, இராமக்கபேட்டை 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் நிரம்பி மழை நீருடன் வீட்டுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் விடியவிடிய கழிவு நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், துப்புரவு ஆய்வாளர் விவேக் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அண்ணாநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்றிவிட்டு கல்வெட்டு அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய நகராட்சி சார்பாக மோட்டார் வைத்து கழிவு நீரை வெளியேற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இவ்வாறு விடியவிடிய பணியில் ஈடுபட்ட நகராட்சியினரை கலெக்டர் அமர் குஷ்வாஹா பாராட்டினார்.