பலத்த மழை காரணமாக பேருந்து நிலையத்தில் அதிகமாக தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி, ஆத்தூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் நீர் தேங்கி காணப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று அண்ணா பூங்கா, சத்திரம், செவ்வாய்ப்பேட்டை, பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்ஷன் உட்பட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதனையடுத்து அழகாபுரம் சோனாநகர், மாரிமுத்து கவுண்டர் தெரு, பெரமனூர், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பெய்த மழையினால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தூங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன்பின் அதிகாரிகள் அப்பகுதியில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சேலம் புதிய பேருந்து நிலையத்திலும் அதிக அளவில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.