ஈரோட்டில் பல இடங்களில் பெய்த மழையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்ததால் ராஜாஜிபுரம், பெரியவலசு, கருங்கல்பாளையம், ஆர்.கே.வி.ரோடு போன்ற பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து பாதாளச் சாக்கடை, மின்சார கேபிள் பதிக்கும் பணி, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.
மேலும் மூலப்பட்டறை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் அதனுடன் மழைநீரும் சேர்ந்து அப்பகுதியில் குளம்போல் காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் இயங்கும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. எனவே காய்கறிகள் வாங்க வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.