திருப்பத்தூரில் இடியுடன் கூடிய மழையால் வீடுகளில் மழைநீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கி படிப்படியாக அதிகரித்து இரவு 10 மணிக்கு பலத்த கனமழை பெய்தது. இதனால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், நாட்டறம்பள்ளி, சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.
இதனையடுத்து மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை, ஏலகிரி மலை, ஜவ்வாது மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் கலைஞர் நகர், அண்ணாநகர், டி.எம்.சி காலனி பகுதிகளில் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. எனவே வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் கண்விழித்து கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டிருந்த கச்சேரிதெரு, செட்டிதெரு, சிவராவ்தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.