ஏரி நிரம்பி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் டி.பெருமாள் பாளையம் பகுதியில் கல்லாறு, திருமணிமுத்தாறு மற்றும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக டி.பெருமாள்பாளையம் ஊராட்சியில் உள்ள காரைக்காடு ஏரி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் ஊருக்குள் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்குவதற்கு இடம் இன்றி சிரமப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் மழைநீரில் உடைமைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பக்கத்திலுள்ள மேடான பகுதியில் விடிய விடிய தூங்காமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஊருக்குள் புகுந்த வெள்ளத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 பசுக்கள் அடித்து செல்லப்பட்டது.
மேலும் அவர் பண்ணையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளும், 3 ஆடுகளும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த பூந்தோட்டம், வெங்காயம், சோளம், வாழை போன்ற விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி உதவி இயக்குனர் மணிவாசகம், வருவாய் ஆய்வாளர் அருள்மொழி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் வெள்ள சேதத்தை தடுக்கும் வகையில் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறும் இடத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இவ்வாறு ஏரி நீர் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தெருக்களில் மண் அரிப்பு ஏற்பட்டு குண்டும் குழியுமாக வீதிகள் காட்சியளித்தது.