கன மழை பெய்து உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் போன்ற பகுதிகளில் வருடந்தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலினால் உப்பளங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இதற்காக அதிராம்பபட்டினம் பகுதியில் கெமிக்கல் உப்பு, உணவுக்குப் பயன்படுத்தப்படும் உப்பு ஆகிய 2 வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதாவது பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்து ஆகஸ்ட் இறுதி வரை உற்பத்தி செய்யப்படும். அதன்படி தற்போது உப்பு வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில் கனமழை காரணமாக உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கியது.
மேலும் வாரப்பட்டு குவிக்கப்பட்ட உப்புகள் மழையால் கரைந்து மீண்டும் உப்பளங்களுக்குள் சென்றதனால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து உப்பளத் தொழிலாளர்கள் கூறியபோது, இத்தனை நாட்களாக நாங்கள் கடுமையாக வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்து வந்தோம். ஆனால் உப்பு வாரும் தருவாயில் மழை பெய்து வந்ததால் எங்கள் உழைப்பு வீணாகி விட்டது. இந்த கனமழையால் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் உப்பளங்கள் மழை நீரில் மூழ்கி விட்டது. இந்த உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் பெரிய அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டியதாக இருக்கும் என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.