சாரல் மழையினால் சூரிய உதயத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசியது. இதனால் கட்டுமரம் மற்றும் பள்ளம் போன்ற சிறு மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கோவளம், சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, மணக்குடி உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீன் தொழில் பாதிக்கப்பட்டது. இவ்வாறு கடல் சீற்றம் காரணமாக எழுந்த ராட்சத அலையால் வள்ளம் கட்டுமரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் பாதியிலேயே கரை திரும்பினர்.
அதன்பின் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவரும் குறைந்த அளவிலான விசைப்படகுகள் மட்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்தனர். எனவே மீன்கள் அதிகளவில் கிடைக்காததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. இந்நிலையில் அதிகாலையிலேயே இருந்தே கன்னியாகுமரியில் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமாகும் காட்சி தெரியவில்லை. இதனால் அதிகாலையில் சூரியன் உதயம் பார்ப்பதற்காக கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். ஆகவே சுற்றுலாப்பயணிகள் இன்றி கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.