வேன்- ஆட்டோ மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடச்சூர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு சந்திரலேகா, கார்த்திகா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சந்திரலேகாவும், ஷாத்திகாவும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தேவி என்பவருடன் நாதிபாளையத்தில் உள்ள தங்களது தோட்டத்திற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோவை தேவராஜன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது கல்ராமணி என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த வேனும், ஆட்டோவும் திடீரென மோதிக்கொண்டது.
இதனால் சந்திரலேகா, ஷாத்திகா, தேவி மற்றும் ஆட்டோ டிரைவர் தேவராஜன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் மேல்சிகிச்சைக்காக சந்திரலேகா, ஷாத்திகா இருவரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ஷாத்திகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.