இந்தியாவின் முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலமாக ராமேஸ்வரம் பாலம் அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமேஸ்வரம் தீவு மற்றும் பாம்பன் நிலப்பகுதியையும் இணைக்கும் விதத்தில் கடலுக்குள் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள பாம்பன் ரயில் பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 105 வருடங்கள் ஆனதால், புதிய பாலம் கட்ட ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.250 கோடி நிதியையும் ஒதுக்கியது இந்த வகையில் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கான முதல் தூண் அமைக்கும் பணி சென்ற பிப்ரவரி மாதத்தில் நடந்ததை தொடர்ந்து, ரயில் பாலத்தின் நுழைவு பகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலும் கடலிள் உள்ளேயும் தூண்கள் அமைக்க அதிநவீன எந்திரங்கள் கொண்டு பணிகள் நடந்து வந்தன.
ஆனால், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பாம்பன் புதிய கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்றதால் பணிகள் முடக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதாலும், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் மீண்டும் பணிக்கு திரும்பிய தொழிலாளர்கள் பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணியில் மும்முரமாக இறங்கி செயல்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் கட்ட இதுவரை, 8 தூண்கள் அமைக்கபட்டு இருக்கின்றன.
மேலும் இங்கு புதிதாக அமைய இருக்கும் தூக்குப் பாலம் குறித்த அனிமேசன் வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிய பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் போது ரயில் பாதை திறப்பதற்கு பதிலாக அப்படியே பாலம் மேலே தூக்கப்படும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் வெர்டிக்கிள் லிஃப்ட் பாலம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப்பயணிகள் இனிமேல் பாம்பன் பாலத்தின் அடியில் கப்பல்களை செல்வதை காண தனி ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.