திருமணமான 2 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் நிரஞ்சனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் பொன்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தலைதீபாவளியை கொண்டாடுவதற்காக கணவன்-மனைவி இருவரும் நிரஞ்சனா வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் இரவு வேளையில் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின் நிஷாந்த் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவி நிரஞ்சனாவிடம் கூறிவிட்டு வெளியில் சென்றார். இதனைத்தொடர்ந்து நள்ளிரவில் தாமதமாக வீட்டிற்கு வந்த நிஷாந்த்தை, நிரஞ்சனா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிஷாந்த் வெளியில் சென்று விட்டார்.
அதன்பின் மீண்டும் நிஷாந்த் வீட்டிற்கு வந்து பார்த்தபோது நிரஞ்சனாவை காணவில்லை. இதனால் நிஷாந்த் அருகில் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த நிஷாந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நிரஞ்சனா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து நிஷாந்த் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிரஞ்சனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நிரஞ்சனா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.