இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் மறைவிற்கு சச்சின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி சந்திரசேகர் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 21- ஆம் தேதி சென்னையில் பிறந்தார். 57 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி, அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து பின் பயிற்சியாளராகவும், வர்ணனையாளராகவும், ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வி.பி சந்திரசேகர் நேற்று மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் இரவு மாடிக்கு சென்று வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து பிணமாக கிடந்துள்ளார். நீண்ட நேரமாகியும் கீழே வராததால் மேலே சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க, விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவரது மறைவுக்கு ட்விட்டர் பக்கத்தில், வி.பி.சந்திரசேகர் காலமானதைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரைப் பற்றி அன்பான நினைவுகள். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.