இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ,விசாரணை ,அசுரன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் அடுத்ததாக காமெடி நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் . எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா விலகி அவருக்கு பதில் நடிகர் கிஷோர் நடிப்பதாக இருந்தது .
ஆனால் நடிகர் கிஷோரும் அந்த படத்திலிருந்து விலகி விட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிக்க இருந்த அந்த வயதான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் . இதற்கான லுக் டெஸ்ட் விஜய் சேதுபதிக்கு எடுக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் . முதன்முறையாக வெற்றிமாறன் விஜய் சேதுபதி கூட்டணி வடசென்னை படத்தில் இணைய இருந்தது . ஆனால் அந்தப் படத்தில் விஜய் சேதுபதி விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.