மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே புதிய வேளான் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பதாகைகளை ஏந்தியபடி எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத் வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கூடாது என்ற கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரு குலாம் நபி ஆசாத் வேளாண் மசோதாக்கள் சட்டவிரோதமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவர் திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.