வேளாண் சட்டங்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு பூபேஷ் பஹல் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதையடுத்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் ஏற்றும்படி காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளுக்கு அக்கட்சி இடைக்கால தலைவர் திருமதி சோனியா காந்தி உத்தரவிட்டார். இதன்படி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் காங்கிரசை சேர்ந்து அம்மாநில முதலமைச்சர் திரு அம்ரிந்தர் சிங் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.
இந்நிலையில் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டிஸ்கர் முதலமைச்சர் திரு பூபேஷ் பஹல். பஞ்சாப் மாநில அரசை தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் ஏற்றப்படும் என தெரிவித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிராக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும் விவசாயிகளுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.