விபத்தில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கரடிவாவி பகுதியில் கரிகாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் அளவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கரிகாலன் திருப்பூரிலிருந்து கரடிவாவி செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பல்லடம்-செட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது க.அய்யம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கரிகாலனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி காரின் பின்பக்கம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கரிகாலனை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு கரிகாலனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் கரிகாலனின் மகன் தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.