சாலையின் மைய தடுப்பில் புதிய மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே பதிவு எண் பெறப்படாத ஒரு புதிய மோட்டார் சைக்கிளில் 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் வைத்திருந்த மைய தடுப்பில் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 2 பேரும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டு அவினாசி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பதிவு எண் கூட இல்லாத புதிய மோட்டார்சைக்கிள் என்பதால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.