வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி முடிந்ததும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றி சின்னமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ஆனந்தராஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.