வாகனம் மோதி கர்ப்பிணி, தாய் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமரன்நகர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு காளீஸ்வரி, கன்னிச்செல்வி என்ற 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கன்னிசெல்விக்கும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் வசிக்கும் டிரைவரான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாரியம்மாள் தனது மருமகனான காளீஸ்வரியின் கணவர் மணிகண்டனுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் காரைக்குடிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு கணவன் மனைவி பிரச்சினையை பேசி முடிக்காததால் மாரியம்மாள், மணிகண்டன் ஆகியோர் கன்னிசெல்வியை அழைத்துக் கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றான் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாரியம்மாளும், கன்னிசெல்வியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மணிகண்டன் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த மாரியம்மாள் மற்றும் கன்னிசெல்வியின் உடல்களை மீட்டு அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கன்னிசெல்வி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.