Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. துடிதுடித்து இறந்த தந்தை மகள் உள்பட 3 பேர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐயாறப்பர் தெற்கு வீதியில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தே.மு.தி.க. நகர துணைச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சந்தோஷினி, சபரிநாதன், சாய்சக்தி என்ற 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குமரவேல் தனது குடும்பத்துடன் குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி குமரவேல் தனது மகள் சாய்சக்தி மற்றும் மனைவி சசிகலாவின் சகோதரி மகனான மதுரையில் வசிக்கும் நித்தீஸ்குமார் என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

அவர்களை தொடர்ந்து மனைவி சசிகலா, மகள் சந்தோஷினி, மகன் சபரிநாதன் மற்றும் தாயாருடன் சென்றுள்ளார். இதனையடுத்து அனைவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு குமரவேல் மோட்டார் சைக்கிளில் சாய்சக்தி மற்றும் நித்தீஸ்குமாரை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் சசிகலா குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் எதிர்பாரதவிதமாக மோதிக்கொண்டது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை சாய்சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பலத்த காயமடைந்த நித்திஷ்குமார் மற்றும் குமரவேலை உடனடியாக மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமரவேலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் நித்தீஸ்குமாரை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நித்தீஸ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து டிரைவரான மயிலாடுதுறை பட்டமங்கலம் பகுதியில் வசிக்கும் சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |