மொபட், லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அய்யப்பன் தாங்கல் அபர்ணா கிரேன் பகுதியில் பார்வதிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது மனைவி தெய்வானை, மகன் சேதுராம், விருகம்பாக்கத்தில் வசித்து வந்த தாய் வசந்தா, அண்ணன் சேதுராமன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் சேதுராமன் கோவில் திருவிழாவிற்காக அங்கிருந்து வந்துள்ளார். மேலும் காரை பார்வதிநாதன் ஓட்டியுள்ளார்.
இந்நிலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் தனியார் கல்லூரி அருகில் வந்து கொண்டிருந்த போது அந்த கார் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மொபட் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் நிற்காமல் முன்னால் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த வசந்தா, மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த பெரம்பலூர் மாவட்டம் நத்தமேடு கிராமத்தில் வசிக்கும் மரவியாபாரி கதிர்வேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, கதிர்வேலு ஆகியோரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பலத்த காயமடைந்த பார்வதிநாதன், தெய்வானை, சேதுராம், சேதுராமன் ஆகிய 4 பேரையும் உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பார்வதிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சேதுராம், சேதுராமன், தெய்வானை ஆகிய 3 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி டிரைவர் திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியில் வசிக்கும் சண்முகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.