லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு லாரி ஒன்று மளிகை பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதியது. அதே நேரத்தில் சேலத்தில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி இருந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அள்ளி கிராமம் பகுதியில் வசிக்கும் அரசு பேருந்து டிரைவர் மாதப்பன் மற்றும் பயணிகள் 17 பேர் காயமடைந்தனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து டிரைவர் மாதப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து காயமடைந்த 9 பயணிகளை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும், 8 பேர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விரிஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.