வேன்-கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள குஞ்சார் வலசை பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்த வேனை டிரைவர் சத்தியேந்திரன் என்பவர் ஓட்டியுள்ளார். அந்த வேனில் 7 மாணவ-மாணவிகள் ஆசிரியைகள் உள்பட மொத்தம் 12 பேர் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த வேன் வேதாளையில் இருந்து மரைக்காயர்பட்டினம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது.
இதில் காரில் இருந்த சென்னை ஊர்பாக்கப்பகுதியில் வசிக்கும் இளவேனில் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் டிரைவர் இளமாறன் மற்றும் பள்ளி குழந்தைகள் நரேந்திர ரோகித், ரோஸிதா மற்றும் 2 ஆசிரியைகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மண்டபம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.