மண்டபம் விபத்தில் உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 11-ந்தேதி கடல் அட்டை மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டம் முடிந்து வீடு திரும்பிய போது மண்டபம் முகாம் அருகில் சென்று கொண்டிருந்த சுற்றுலா வாகனம், மீனவர்கள் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி மண்டபம் பகுதிக்கு நேரில் சென்று அங்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். அவருடன் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன், ராமநாதபுரம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வக்கீல் கவிதா சசிகுமார், அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சாமிநாதன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், மண்டபம் நகர் செயலாளர் சீமான் மரைக்காயர், மாவட்ட இளைஞர் அணி பாரதி நகர் ராஜேந்திரன், மருத்துவர் இளையராஜா உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.