லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சின்னகண்ணுபுரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புதிய துறைமுகம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலையை முடித்து விட்டு அதே ஓட்டலில் வேலை பார்க்கும் தம்பியுடன் மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு எடை நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.