ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா. நேற்று காலையில் இத்தம்பதியர் பயணிகள் ஆட்டோவில் பேரூரில் இருந்து காளம்பாளையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர். ஆட்டோ பச்சாபாளையம் பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் ஆட்டோவை உரசியபடி சென்றது. இதில் ஆட்டோவில் தலையை வெளியே நீட்டி உட்கார்ந்திருந்த கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்த சரக்கு வாகன ஓட்டுனர் கிஷோர்குமாரை கைது செய்தனர்.