டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நாரியமங்கலம் கிராமத்தில் ரங்கநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் டிராக்டரில் நாரியமங்கலத்தில் இருந்து அவலூர்பேட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது நாரியமங்கலம் அருகில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ரங்கநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து ரங்கநாதனின் மனைவி குமாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கீழ்பென்னாத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.