கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள தேவிபட்டினம் பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான் அம்மன் கோவில் பகுதியில் தெய்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் தாராபுரத்தில் இருந்து காங்கேயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம்-காங்கேயம் சாலை இச்சிப்பட்டி அருகில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பலத்த காயமடைந்த தெய்வமணியே அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன்பின் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊதியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.