பைக் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வயலூர் கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஞானசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ஞானசேகர் மோட்டார் சைக்கிளில் வயலூர் கிராமத்திலிருந்து வந்தவாசி சாலையில் சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது மேல்மலையனூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பஸ் பைக் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஞானசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஞானசேகரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.