லாரி மோதி அண்ணன்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.இவருக்கு வெங்கடேசன் என்ற மகனும் சத்யபிரியா என்ற மகளும் உள்ளனர். வெங்கடேசன் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சத்யபிரியா அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தனது தங்கை சத்தியபிரியாவை கடைக்கு விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையில் சத்யபிரியாவுடன் பணியாற்றும் அதே பகுதியை சேர்ந்த சந்தியாவும் வெங்கடேசனின் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவர்கள் நத்தம் கிராமத்தை கடந்து பெரியபாளையம் சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் வெங்கடேசனும், சத்யபிரியாவும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சந்தியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடி தலைமறைவான லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.