மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் செல்வகுமார்(35) இவர் திமிரி மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ளார் . அதே பகுதியை சேர்ந்த கிஷோர் என்ற கிருஷ்ணகுமார் அதிமுக மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக உள்ளார்.இவர்கள் இருவரும் ஆற்காட்டில் ஜவுளிக்கடை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று தாமரைபாக்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆற்காட்டை நோக்கி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தனர்.
அப்போது ஆற்காடு – ஆரணி சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மணல் ஏற்றி வந்த லாரி திடீரென்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் கிருஷ்ணகுமார் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த செல்வகுமார் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார் . மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.