கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காளிமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென முன்னால் சென்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இதனால் காரை ஓட்டி வந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த சக்திசுந்தரம் , அமிர்தவல்லி, விக்னேஸ்வரன், தனம், சசிகலா, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அமிர்தவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.