கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார். இவர் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவருடைய உறவினர் அனந்தராமன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு உறவினர் ஒருவரை செல்லூரில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரில் திரும்பியுள்ளனர்.
அப்போது சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த சஞ்சீவிகுமார் மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அனந்தராமன் ஆகிய இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.