Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டயர் வெடித்து உருண்டோடிய கார்… எதிரே வந்த லாரி… கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..!!

டயர் வெடித்து சாலையில் உருண்ட காரின் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்தவர்கள் யூசுப்(18), லோகேஷ்(18) ,நரேன்(18) மற்றும்  கோபால் (20). இவர்கள் நான்கு பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை இரண்டாமாண்டு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் காரில் சத்துவாச்சாரியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளனர். அப்போது கோபால் காரை ஓட்டியுள்ளார்.

ரத்னகிரி அடுத்துள்ள அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பக்க டயர் வெடித்து உள்ளது. இதில் நிலை தடுமாறிய கார் அங்குள்ள தடுப்பு சுவரின் மீது மோதி  சாலையில் உருண்டது . அச்சமயத்தில் ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி  எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியது . அப்போது காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த யூசுப் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்ற மூவரும் காயங்களுடன் உயிர்தப்பினர். அங்கிருந்தவர்கள் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யூசுப்பின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |