இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் திரவியராஜ்(54). இவர் நேற்று இரவு திருச்சி- தஞ்சை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது தஞ்சையிலிருந்து திருச்சி நோக்கி எபின்(21) மற்றும் புஷ்பராஜ்(21) என்ற இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். துவாக்குடியில் உள்ள அசூர் பிரிவு ரோடு அருகே வந்த போது திரவியராஜ் தனது மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் மீது வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தால் திருச்சி- தஞ்சை சாலையில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.