மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியை சேர்ந்த தம்பதியினர் ராஜேந்திரன்-சுமதி. தம்பதியர் இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சுமதியும், ராஜேந்திரனும் படுகாயம் அடைந்தனர்.
இதனை பார்த்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேந்திரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.