லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலத்தில் உள்ள ஏரப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் கனகராஜ் – ருக்மணி. இத்தம்பதியினருக்கு தனுஸ்ரீ, ரித்திக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. கனகராஜ் விவசாயம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் புங்கம்பள்ளி வந்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குப்பந்துரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.